Thursday, April 10, 2008

சித்தர்கள் மரபு

சித்தர்கள் பதினெட்டு என்கிறது பண்டைய நூல்கள். அவர்கள் கும்பமுனி, நந்திமுனி, கோரக்கர், புலிப்பாணி, புசுண்ட ரிஷி, திருமூலர், தேரையர், யூகிமுனி, மச்சமுனி, புன்னாக்கீசர், இடைக்காடர், பூனைக்கண்ணர், சிவவாக்யர், சண்டிகேசர், உரோமரிஷி, சட்டநாதர், காலங்கிநாதர், போகர் என்று கருவூரார் எழுதிய "அட்டமாசித்து" என்ற நூல் கூறுகிறது.

வேறொரு நூலான நிஜானந்த போதத்தில் பதினெட்டு சித்தர்களின் பெயர்கள் வேறுபடுகிறது அவர்கள்: அகத்தியர், போகர், நந்தீசர், புண்ணாக்கீசர், கருவூரார், சுந்தரானந்தர், ஆனந்தர், கொங்கணர், பிரம்மமுனி, உரோம முனி, வாசமுனி, அமலமுனி கமலமுனி, கோரக்கர், சட்டைமுனி, இடைக்காடர், பிரம்ம முனி போன்றவர்கள் ஆவார்.

இந்த சித்தர்களின் காலத்தை மிகச் சரியாக வரையறுக்க முடியவில்லை. கி. பி. 14-17 ஆம் நூற்றாண்டுகளில் இடைப்பட்ட கால அளவுகள் பலவற்றை தமிழ் சான்றோர்கள் குறிக்கின்றனர். அகத்தியருக்குப் பிறகு திருமூலர், திருமூலருக்குப் பிறகு மற்றையோர் என சித்தர் மரபு அறியப்படுகிறது.

ஆன்மிகம் தழைக்கவும், மக்களின் ஆரோக்கியம் செழிக்கவும் சித்தர்கள் முக்கிய பங்காற்றி இருக்கின்றனர். அவர்கள் தத்துவ நெறியிலும், மருத்துவத் துறையிலும் அனேக நூல்கள் செய்துள்ளனர்.

சித்தர்கள் கடவுள் நிலை பெற்றவர்கள். கடவுளுக்குச் சமமாய் போற்றி வணங்கப்பட்டனர். சித்தர் வழிபாட்டை முதலில் கொண்டு வந்தது சமணர்கள். பிறகே, மற்றவர்கள் கைக்கொண்டனர்.

புத்த மதத்தின் ஒரு பிரிவான மந்திரயனத்தின் பிறப்பிடம் ஆந்திராவில் உள்ள ஸ்ரீபர்வதம். சித்தர்கள் பலரும் ஸ்ரீ பர்வதத் தொடர்பு கொண்டிருந்தனர். புத்த மத சித்தர்கள் 6-12ஆம் நூற்றாண்டுகளில் வாழ்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சித்தர்கள் பல்வேறு குளத்தில் பிறந்தவர்கலாயினும் (அரசர், வணிகர், அந்தணர், கருமார், இன்ன பிற) சித்தர் என்ற தனியொரு மரபுக்கு உரியவராயினர்.

Tuesday, April 8, 2008

அட்டமா சித்தி என்றால் என்ன?

அட்டமா சித்தி என்றால் என்ன?
அட்டமா சித்தி எட்டு வகையான அபுர்வ சக்திகளை சித்தர்கள் தங்களது தவ வலிமையாலும் இறைவனின் அருளாலும் பெறப் பட்டதே அட்டமா சித்தி எனப்படும். எட்டு வகையான சித்திகளின் பெயர்கள் வருமாறு:

1. அணிமா - உடலைப் பஞசினும் ஒய்யதாக மாற்றி பிறர் கண்களுக்குத் தோன்றாது மறைத்தல்.
2. மகிமா - உடலை புதாகாரமாகத் தோன்றச் செய்தல்.
3. கரிமா - உடலை யானையைப் போன்று கனமாக்குதல்.
4. லகுமா - உடலை தக்கையைப் போல் இலேசாக்குதல்.
5. பிராப்தி - தமது ஆற்றலால் வெயில் மழை முதலிய கால நிலைகளை மாறச் செய்தல்.
6. பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல்.
7. ஈசத்துவம் - ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்தல்.
8. வசித்துவம் - தெய்வங்களைத் தன் வயப்படுத்துதல்
.
மேற் கொடுக்கப் பட்டுள்ள எட்டு விதமான அபூர்வ சக்திகளைக் கொண்டு சித்தர்கள் நம்பமுடியாத பல அதிசயங்களை செய்தனர். இன்றும் நம்மோடு வாழ்ந்து வரும் பல சித்தர்கள் சூட்சுமான வாழ்க்கையோடு வாழ்கிறார்கள்.

Monday, April 7, 2008

சித்தர்கள் என்பவர் யார்?

சித்தர்கள் என்பவர் யார்?

சித்தம் என்பது புத்தி மனம்.
சித்து - புத்தியால் ஆகிற காரியம்.
சித்தர் - புத்தியைக் கட்டுப்படுத்தியவர்.
சித்தர்கள் யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் புத்தியைக் கட்டப்படுத்துவார்கள். சித்தர்களை ஆன்மீகப் புரட்சியாளர்கள் என்று சொல்வதும் உண்டு.

"சித்தர்" என்பவர் பரத்தோடு சேர்ந்தவர்கள் பிரம்மமாய் எங்கும் நிறைந்தவர்கள். அணிமா சித்திகளை (அஷ்டமா சித்திகள்) எட்டையும் அடைந்தவனே சித்தன் ஆவான். சித்தர்கள் தங்கள் ஆன்ம ஞானத்தைப் பெருக்கிக் கொண்டு தங்கள் உடலுடன் இருக்கும் பொழுதே இறைவனுடன் கலந்து விடுவார்கள். நினைவு செயல் என்பவற்றைத் துறந்து சிவனோடு ஒன்றாக கலந்து விடுவார்கள்.

கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள். கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள். காலத்திற்கு உட்பட்டவர்கள் பக்தர்கள். காலத்தை வென்றவர்கள் சித்தர்கள்.
உடலையும் உயிரையும் பக்தர்கள் பாரமாகக் கருதுபவர்கள். ஆனால் சித்தர்கள் அவைகளை நலம் செய்யும் கருவிகளாகக் கண்டவர்கள் சித்தர்கள். 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் தேரவும் மாட்டார்" என்ற திருமூலர் பாடல் சித்தர்களின் அணுகுமுறையை தெளிவு படுத்தும்.

சித்தர்கள் இமயம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரனை, தியானம் சமாதி, ஆகிய அட்ட யோக யோக வழிகளில் சிறிதும் வழுவாது வாழ்ந்து, உணவையும் உடல் இயக்கத்தையம் குறைத்து, வாசி என்ற மூச்சினை அடக்கி, நாடிகளை துய்மையாக்கி, அவைகளின் மூலம் சரீரத்தில் உள்ள ஓவ்வோர் உயிர் அணுவையும் துய்மையாக்கி, பிறகு மனன வழிபாட்டால் அணுவியக்கம் முற்றி ஒளிவடிவம் என்னும் தெய்வ வடிவம் வளர்ந்து வரும் பொழுது பொருள்களின் பொய்த் தோற்றமும் உண்மை இயல்பும் மாறி மாறித் தோன்றி முடிவில் தோற்ற மாயை மறைந்து உண்மை இயல்புமட்டும் நிலைத்துத் தோன்ற உடலை ஞான ஒளிமயமாக்கி நாத தத்துவத்தோடு இணைத்து சாவை வென்று சதாசிவமாக வாழ்வதே சித்தர்களின் வாழ்வு முறையாகும்